டில்லி
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜிடிபியில் 6% வரை செலவு செய்யலாம் எனப் பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் ஆனந்த சர்மா ஆலோசனை அளித்துள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பின்னடைந்து வருகிறது. தற்போது கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த முழு அடைப்பு அமலில் உள்ளது. இதனால் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அடியோடு நின்றுள்ளது. இந்த அடைப்பு முடிவுக்கு வந்த பிறகு கடும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையை முன்னேற்ற முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் பாஜக அரசுக்கு தொடர்ந்து பல ஆலோசனைகள் வழங்கி வருகிறார். ஆனால் மத்திய அரசு அதைக் கவனத்தில் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வர்த்தக்த்துறை அமைச்சருமான ஆன்ந்த் சர்மா காணொலி மூலம் நிருபர்களைச் சந்தித்தர்.
அந்த சந்திப்பில் ஆனந்த் சர்மா, “கொரோனா வைரசைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள முழு அடைப்பால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை சரிசெய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மத்திய அரசு செலவிட்டு வருகிறது. இந்த அளவு செல்வு செய்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலாது
இது போல் அசாதாரண நேரங்களில் அசாதாரண முடிவுகளைப் பிரதமர் மோடி துணிச்சலாக எடுக்க வேண்டும். அவர் மொத்த ஜிடிபியில் 5 முதல் 6 சதவீதத்தை கரோனா நிவாரண நிதிக்கும், பொருளாதார மீட்சிக்கும் செலவிடலாம். ஏற்கவே அமெரிக்கா 10 சதவீதம் ஜிடிபியில் செலவிடுகிறது. அது போல பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் 15 சதவீதம் வரை செலவிடுகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது, அதைச் சமாளிக்க அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜிடிபியில் 3 சதவீதத்தைத் தாராளமாகச் செலவிட்டு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட்டது.
இப்போது மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோருக்குப் புதிதாக மேலும் சலுகைகளை அறிவித்துச் செலவிட வழி வகுக்கலாம். தற்போதுள்ள சூழலில் மத்திய அரசு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இப்போது பல்வேறு துறைகளுக்கு நிதியுதவி அளித்துக் கை தூக்கிவிடத் துணிச்சலான முடிவுகளைப் பிரதமர் மோடி எடுக்க வேண்டும்
மத்திய அரசு மாநிலங்களுக்கு நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதிய நிலுவை ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நடுத்தர மற்றும் சிறு தொழில்துறைதான் ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாமல் கடன் அளித்துச் சரிவிலிருந்து மீட்க வேண்டும்.
இப்போது நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள முழு அடைப்பை ,முழுமையாகவும் உடனடியாகவும் நீக்குவது ஆபத்தாகும். எனவே படிப்படியாக முழு அடைப்பை நீக்கி பொருளாதாரச் செயல்பாடுகள் தொடங்கியபின், சாலை வழியாகப் போக்குவரத்து தொடங்க வேண்டும்.
நாட்டில் வேளாண் பணிகள் எந்தவித்திலும் பாதிக்கப்படக்கூடாது. குறிப்பாக அறுவடை நேரத்தில் போக்குவரத்து மிகவும் அவசியம்.
வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மத்திய அரசிடம் பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்பு நிதியை வழங்கி வருகின்றன. அதை விடுத்து அந்த நிதியை அந்தந்த மாநில அரசுகளிடமே முதல்வர் நிவாரண நிதியில் வழங்கலாம் .மேலும் பிஎம் கேர்ஸ் நிதியைப் பிரதமர் நிவாரண நிதியோடு இணைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.