சென்னை: தனியார் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும், இலவச கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் தி.மு.க., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம், இரண்டாவது நிலையில் இருந்து, மூன்றாவது நிலைக்கு சென்று விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது, அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும்.
அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். நோய் தொற்று குறித்த சோதனையை விரைவுப்படுத்த வேண்டும். அதை, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும், இலவசமாக செய்ய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
சுவாசக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவ துறையைச் சார்ந்தவர்களுக்கும், களப் பணியாளர்களுக்கும், பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் அளிக்க வேண்டும். பரிசோதனை, நோய் தொற்று, இறப்பு எண்ணிக்கையில் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்காததும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை, இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்ததும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனுக்காக போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கையை திரும்ப வேண்டும்.
சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து பேரிடர் கால களப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஊக்கச் சம்பளம் வழங்க வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும், உதவிகள் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் திமுக தலைவர்.