டில்லி
வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 806 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 19 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விமான, தரை மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பல வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. இவ்வாறு டில்லி, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் பல தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு உதவ ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது.
இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங், “தேசிய ஊரடங்கு காரணமாக வரும் ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி, மும்பை, புனே போன்ற நகரங்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.
ஏற்கனவே எங்கள் விமானங்கள் மூலம் அரசுக்கு உதவ உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்கிறோம். எனவே மனிதாம்பிமான் அடிப்படையில் இந்த உதவியை அரசுக்குச் செய்ய நாங்கள் முன் வந்துள்ளோம். குறிப்பாகப் பீகார் மக்கள் தற்போது இந்த நகரங்களில் பெருமளவில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் உதவ முன் வந்துள்ளோம்.”எனத் தெரிவித்துள்ளார்.
இதைப் போல் இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் தங்கள் சேவைகளை அளிக்க முன் வந்துள்ளன.