நாகர்கோவில்:

கொரோனா தொற்று காரணமாக, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26ஆக உயர்ந்துள்ள நிலையில், கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள  கன்னியாகுமரி பகுதி மக்களிடையேயும் பீதி நிலவி வருகிறது. அங்கு,  குவைத் நாட்டில் இருந்து குமரி  திரும்பிய கோடி முனை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நபர்  மூளைக் காய்ச்சல் மற்றும் லிவர் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தாகவும், அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, இவர் கொரோனாவால் உயிர் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…