கியூபா:
கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இத்தாலிக்கு உதவ கியூபா முன் வந்துள்ளது. இதையடுத்து, டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய மருத்துவ குழுவை, இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் கொரோனா வைரசால் மிகவும் பாதிப்படைந்துள்ள லோம்பார்டி பிராந்தியட்திற்கு அனுப்பியுள்ளது.
கரிபியன் நாடான கியூபா மருத்துவர்கள் படையை கடந்த 1959 புரட்சிக்குப் பின்னர் பெரும்பாலும் ஏழை நாடுகளில் உலகெங்கிலும் உள்ள பேரழிவு தளங்களுக்கு அனுப்பி உதவி வருகிறது. ஹைட்டியில் காலராவுக்கு எதிரான போராட்டத்திலும், 2010-களில் மேற்கு ஆபிரிக்காவில் எபோலாவுக்கு எதிராகவும் கியூபா தனது மருத்துவர்கள் குழுவை அனுப்பியிருந்தது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கு உதவ மருத்துவர் குழுவை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
வெளிநாடுகளில் புதிய நோய் பரவுவதை எதிர்த்து கியூபா மருத்துவ குழுவை அனுப்புவது இது ஆறாவது முறையாகும். இதற்கு முன்பு, கியூபா தனது மருத்துவர் குழுவை, வெனிசுலா மற்றும் நிகரகுவா மற்றும் ஜமைக்கா, சுரினாம் மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத கம்பெனிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலிக்கு புறப்படுவதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ குழு தலைவர் 68 வயதான லியோனார்டோ பெர்னாண்டஸ், வைரஸ் பாதிப்பில் சிக்கி தவிக்கும் இத்தாலிக்கு மக்களுக்கு உதவுதற்காக கொரோனா அச்சத்தை ஒதுக்கி வைத்து அங்கு பயணமாக உள்ளோம் என்றார். இது தனது எட்டாவது சர்வதேச பணி என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.