சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில், திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் நிவாரண நிதியில் இந்தத் தொகை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக சார்பாக சட்டசபையில் 98 உறுப்பினர்களும், நாடாளுமன்ற மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

மேலும், தமிழக அரசு இதுதொடர்பாக போதியளவு நிதி ஒதுக்கி, தொழிலாளர்களைக் காத்திட வேண்டுமென கூறியுள்ளார் திமுக தலைவர்.

இதுமட்டுமின்றி, இந்த மனிதநேய முயற்சியில் தொழிலதிபர்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

மேலும், வைரஸ் தொற்றைத் தடுக்க, அரசுகள் பிறப்பிக்கும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.