சென்னை: கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைகளை பெற தமிழகத்தில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5000ஐ கடந்திருக்கிறது. இந்தியாவில் 2 பேர் பலியாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டி இருக்கிறது.
இந்த சூழலில் மக்கள் கொரோனா தொடர்பான புகார்கள், சந்தேகங்கள், என்ன வைரஸ் என்பது தொடர்பாக அரசிடம் உரையாட இலவச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா உதவி எண் 044-29510500 என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களில் அறிகுறிகள் குறையவில்லை என்றால், ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், 104 என்ற எண்ணில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். மேலும், 044-2951 0400/2951 0500 ஆகிய எண்களிலும், 94443 40496/87544 48477 என்ற மொபைல் எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
புதுச்சேரி மாநிலத்திற்கு 0866 – 2410978 என்ற எண்ணும் என பல்வேறு மாநிலத்திற்கு தனித்தனி உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளன.