ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்நோய்க்கு இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் வரை பலியானது உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலக சுகாதார கழகத்தால் கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ், இத்தாலியில் இதுவரை 1266 பேரை பலி வாங்கியுள்ளது. இந்நோய் மேலும் பரவாது தடுக்க அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதாரக் கழகத் தலைவர் டெட்ரஸ் அதினோம் கேப்ரியேசஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “உலகளவில் கொரோனாவால் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
பலி எண்ணிக்கையில் இது துயரமான மைல்கல். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் காட்டுத் தீ போன்றது. பாதிக்கப்பட்டோரை மருத்துவர்கள் கவனமாகத் தனிமைப்படுத்திக் கண்காணிப்பதன் மூலமே அந்தக் காட்டுத்தீ பரவாமல் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதுவரை COVID-19 எனப்படும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவிலும் நேற்றுவரை 1875 பேரிடம் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலரிடம் மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.