நியூயார்க்
அமெரிக்க பிராந்தியத்தில் விமானங்களை இயக்கிவரும் ஜெட் ப்ளூ விமானத்தில் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தே ஒரு பயணி நியூயார்க்கில் இருந்து புளோரிடாவுக்கு பயணம்செய்தார்.
ஜெட் ப்ளூ விமானத்தில் பயணம் செய்த அந்த பயணி இனி தங்கள் விமானத்தில் ஏற வாழ்நாள் தடை விதித்திருக்கிறது விமான நிறுவனம்.
ஜெட் ப்ளூவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வியாழக்கிழமை இரவு நியூயார்க் நகரத்திலிருந்து புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் வரை பயணம் செய்த – பெயரிடப்படாத அந்த பயணி, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் இதுபோன்ற ஒரு “அமைதியற்ற நிலைமையை” ஏற்படுத்தியதற்காக அந்த பயணி இனி தங்களின் விமானங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து பாம் பீச் சர்வதேச விமான நிலையத்திற்கு 114 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சென்ற ஜெட் ப்ளூ விமானத்தில் சுமார் இரண்டு மணிநேரம் அந்த பயணி பயணித்தார்.
பாம் பீச் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது கையில் மருத்துவ பரிசோதனை அறிக்கையை பார்த்து அதிர்ந்து போன ஊழியர்களும் சக பயணிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரித்ததில், அவருக்கு கொரோனா இருப்பது தெரிந்தே பயணித்த விஷயம் தெரியவந்தது, விசாரணைக்கு பின்…
அவர் தனது பயணத்தின் போது இருமவோ, தும்மவோ, செய்யவில்லை அதனால் சக பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை, என்று சமாதானம் கூறி அனைவரையும் அனுப்பிவைத்தனர் சுகாதார அதிகாரிகள்.
இருந்தபோதும், தங்களது விமானத்தில் பயணம் செய்த ஒருவர் இதுபோன்ற அசாதாரண சூழலை உருவாக்கியதால் அவரை வாழ்நாள் முழுக்க தங்கள் விமானத்தில் ஏற்றப்போவதில்லை என்று விமான நிறுவனம் முடிவுசெய்திருக்கிறது.