வாஷிங்டன்

லகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசின் தாக்குதலிலிருந்து மீண்ட அமெரிக்கப் பெண், தான் இந்த கொடும் நோயில் இருந்து மீண்டு வந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்…

கொரோனா தொற்று அமெரிக்காவிலும்  அதிக உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,  சியாட்டில் நகரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பையோடெக்னாலஜியில் ஆய்வாளரான எலிசெபெத் ஸ்நிட்ஜர் என்ற பெண்மணி, கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டது எப்படி, அதில் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

கொரோனாத் தொற்று தனக்கு ஏற்படுத்திய அறிகுறிகள் பொதுவானதாக இல்லாததால் முதலிலேயே அதனைக் கண்டறிய முடியவில்லை எனவும், ஐந்து நாட்டுகளுக்குப் பிறகே சோதனை முடிவுகள் உறுதி செய்தன எனவும் ஸ்நிட்ஜர் கூறியுள்ளார்.

மேலும் முதல் மூன்றுநாட்கள் அவருக்கு 103 டிகிரிவரை காய்ச்சல் இருந்ததாகவும், பிறகு மிகவும் குளிராக உணர்ந்ததாகவும், மூச்சுத்திணறல்  ஏற்படவில்லை எனவும் காய்ச்சலுடன் அலுவலகம் சென்றதால், நண்பர்கள் சிலருக்கும் இத்தொற்று பரவியது என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முடிவுகள் எலிசெபெத்திற்கு கொரோனா தொற்றின் தொடக்க நிலை இருப்பதை காட்டியபின் அவர் பயப்படாமல் வீட்டில் முழுமையாக ஓய்வு எடுத்துள்ளார். தகுந்த மருத்துவ ஆலோசனைகளின் மூலம் தற்போது அந்நோயிலிருந்து மீண்டுள்ளார்.

”கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானால், தைரியத்துடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். பொதுவிடங்களுக்கு செல்வதை அறவே தவிர்த்து, முழுமையாக ஓய்வில் இருங்கள். அதிக நீர் பருகுவதும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வதும் ஆரம்ப நிலையில் உள்ள கொரோனா வைரசை எளிதாக கட்டுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்மணியின் விளக்கம், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பலருக்கு கொரோனோ வைரஸ் தொற்று குறித்த அச்சத்தை போக்கும் வகையில், பொதுமக்களிடையே சிறுநம்பிக்கை ஒளியை ஏற்றி வருகிறது.