வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்ற கருத்தாக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக மாநாடு, கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் மொத்தம் 100 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொற்றால் 4000க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதனால் உலக நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இதுவரை 173 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள நியூ ரோசெல் எனும் பகுதியில் மட்டும் 108 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதால், சுமார் 2.5 சதுர கி.மீ. பகுதியை ‘கட்டுப்பாட்டு மண்டலமாக’ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்ற கருத்தாக்கத்தில் மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை வர்த்தக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சிஎப்ஆர்) சார்பில், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்பது பற்றிய வட்டமேஜை மாநாடும் நடக்கவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பயத்தால் மாநாடு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.