திரைத்துறை மீது தீரா காதல் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மன்சூரலிகான். திரைத்துறையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிந்து கருத்து சொல்வார், தவறுகளை தட்டிக்கேட்பதில் நிஜமாகவே ஹீரோதான் இவர்.
டான்சராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் வில்லன், கேரக்டர், காமெடியன் நடித்து வந்ததோடு, அவ்வப்போது நாயகனாகவும் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் அவரே தயாரித்து இசையமைத்து, பாடல்கள் எழுதி மன்சூரே, நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம், அதிரடி!
“குடியரசு தின சிறப்பு பேட்டி”க்காக மன்சூர் அலிகானை தொடர்புகொண்டோம். பெரிய நடிகராக, பல்துறை வித்தகராக இருந்தாலும், எந்த வித ஈகோவும் இல்லாமல் பேசினார்.
இதோ… அவர் நமக்களித்த சிறப்புப்பேட்டி.
சமீபத்தில் நீங்கள் ஹீரோவாக நடித்து வெளியான “அதிரடி” திரைப்படம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?
மிகச் சிறப்பாக ஓடுகிறது. நூறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உழைத்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது!
நூறாவது நாள் விழா எப்போது?
படம் முடிந்து ரிலீஸ் செய்தவுடன், அடுத்தடுத்த பணிகள் வந்துவிட்டன. இப்போது ஆறு ஏழு படங்களில் நடித்து வருகிறேன். ஆனாலும் நேரம் ஒதுக்கி விரைவில், அதிரடி படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்துவேன்.
பெப்சி சங்கத்துக்கு போட்டியாக டாப்சி என்ற சங்கத்தை ஏற்படுத்தினீர்கள். சங்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
முதலில் ஒரு விசயம்… யாருக்கும் போட்டியாக நான் சங்கத்தை துவங்கவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் கடந்த பல ஆண்டுகளால் நீடித்து வந்த சம்பளச் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டது. ஆனால் “சிறு முதலீட்டுப் படங்களுக்கு பெப்சியின் சம்பள விகிதங்கள் கட்டுப்படியாகாத நிலை. அதனால்தான் டாப்சி என்ற புதிய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவின் 24 பிரிவுகளுக்கும் வேலை செய்ய எங்கள் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். மேலும் பலர் இணைந்து வருகிறார்கள். டாப்சி தொழிலாளர்களை வைத்துத்தான் அதிரடி திரைப்படத்தை சிறப்பாக எடுத்தேன்.
நீங்கள் நடிக்க ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
திரைப்படம் மூலமாக, பல நல்ல கருத்துக்களை துணிச்சலாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் ஐந்து வெள்ளி விழா படங்கள். 90 படங்கள் நூறு நாட்கள் ஓடியவை. பதினோரு படங்களை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறேன். பெரிய பின்னணி இல்லாமல் திரைத்துறைக்கு வந்த நான் இதையெல்லாம் சாதித்தது பெரிய விசயமாக நினைக்கிறேன்.
நீங்கள் பெருமையாக நினைப்பது..
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் நடிகனாக இருக்கிறேன் என்பதுதான் எனது பெருமை. படப்பிடிப்பில் இந்த வசதி வேண்டும் அந்த வசசதி வேண்டும் என்று கேட்டு நான் அடம்பிடித்ததில்லை.
நான் நடிக்கும் எந்த காட்சியையும் ஒரே ஷாட்டில் ஓகே செய்துவிடுவேன். ரீடேக் என்ற பிரச்சினையே என்னிடம் கிடையாது. இதையெல்லாம்தான் பெருமையாக நினைக்கிறேன்.
அதிரடியான கருத்துக்களை அநாயாசமாக சொல்லிவிடுகிறீர்களே.. நீங்கள் எதற்குமே தயங்கியதில்லையா?
எனது கொள்கைக்கு ஆபத்து வரும்போது தயக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு படத்தில் சோற்றுப் பானையைக் காலால் உதைக்கச் சொன்னார்கள். முடியாது என்று அந்தப் படத்திலிருந்தே விலகினேன். அதேபோல் அம்மாவை அடிப்பதுபோல் ஒரு காட்சி. வில்லன் வேஷம் என்றாலும் அந்தக் காட்சியில் நடிக்க மனம் ஏற்கவில்லை. அதனால் வேறொரு நடிகரை அந்த காட்சியில் நடிக்க வைத்தார்கள்.
இப்படி எனக்கென்று இருக்கும் கொள்கைகளை வாய்ப்புக்காக நான் என்றுமேவிட்டுக்கொடுத்ததில்லை.
உங்கள் மனக்குறை என்ன?
என் திறமைக்கு சவால் விடும் கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். அவை இன்னும் வரவில்லை என்பதே என் மனக்குறை.
நீங்கள் சினிமாவுக்கு வர உந்துதலாக இருந்தது யார்?
எனது அண்ணன் முகமது அலிதான் உந்துதலாக இருந்தார். அவர் ஒரு கலை வித்தகர். அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்தேன். பேச்சுப் போட்டி, மோனோ ஆக்டிங். கட்டுரைப் போட்டி என்று எல்லாவற்றிலும் முதல் பரிசு வாங்குவார். அவரைப் பார்த்துத்தான் எனக்கும் கலையில் ஆர்வம் வந்தது. நானும் பள்ளி போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசுகளை வாங்கியிருக்கிறேன்.
என் அண்ணன், பள்ளி நாடகத்தில் தங்கப் பதக்கம் சிவாஜியாக நடித்து இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. சினிமாவில் நடிக்க முயற்சித்தார்.. கைகூடவில்லை. நான் முயற்சித்தேன். எனக்கு வாய்ப்பு அமைந்துவிட்டது. என் அண்ணன் முகமது அலிதான் எனக்கு இன்ஸ்பிரேசன்!
சமீப காலமாக அரசியல், போராட்டங்களில் தீவிர ஈடுபாடு காட்டுவதில்லையே… ஏன்..?
சமூக அக்கறையோடு பேசினால் பேராடினால் ஆட்சியதிகாரத்தில் யார் இருந்தாலும் எரிச்சல் அடைகிறார்கள். இவனை உள்ளே தூக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள். ஆகவேதான் போராடுவதையும் அரசியல் ஈடுபாட்டையும் நிறுத்திக்கொண்டேன்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கறுப்பு வெள்ளை பட காலத்திலிருந்து நடிக்கிறார். நிறைய ரசிகர்களை கொண்டுள்ளவர். அவருக்கு விருது கொடுத்திருக்கிறாரகள். வாழ்த்துகிறேன். ( சற்று இடைவெளிவிட்டு) காண்ட்ரவசியாக ஏதும் சொல்ல விரும்பவில்லை.
சினிமா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் நீங்கள். “ராஜாதி ராஜ.. “ என்று படத்துக்கு மீக நீண்ட தலைப்பு வைத்து, கின்னஸில் தமிழ்ப்படம் இடம் பெறச் செய்தவர். அரசியல் கருத்துக்களை பல முறை வெளிப்படையாக சொன்னவர். சமீபத்திய வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவியவர். உங்களுக்கு பத்ம விருதுகள் அளிக்கப்படவில்லையே.. இது வருத்தமாக இல்லையா?
நான் எப்போதுமே விருதுகளைப் பற்றி கவலைப்பட்டது இல்லை. என் நடிப்பை மக்கள் ரசித்து கை தட்டுகிறார்களே.. அதுதான் விருது.
தகுதி இருந்தும் விருது கிடைக்கவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்தாதா?
தமிழக மீனவர்கள் நிம்மதியா மீன் பிடிக்கணும், நாட்டில் அமைதியும் வளமும் ஏற்படணும். இதெல்லாம்தான் என் கவலை.
தற்போது புதிய முயற்சி ஏதாவது செய்கிறீர்களா..?
“ எர்த் நோ மோர்” என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறேன். மிகப்புதுமையான முயற்சி. விரைவில் பத்திரிகையாளர்களை அழைத்து காண்பிக்கிறேன்.
வாழ்த்துகள் சார்.. குடியரசு தின செய்தியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எத்தனையோ பேர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள். அதன்பிறகு அறிஞர்கள் உழைத்து குடியசுக்கான சட்ட திட்டங்களை உருவாக்கினார்கள். ஆனால் இன்று நாம் எப்படி இருக்கிறோம்? குறிப்பாக குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் எவ்வளவு இருக்கின்றன? இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எனது “அதிரடி” படத்திலும் மதுவின் கொடுமையை சொல்லியிருக்கிறேன். மது இல்லாவிட்டால் நாடும், மக்களும் நிம்மதியாக வளமாக இருப்பார்கள். ஆகவே மதுவை விலக்குவதுதான், உழைத்த சுந்திரப்போட்டா தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
குடியை விலக்கு… இதுதான் மக்களுக்கு நான் சொல்லும் குடியரசு தின செய்தி!
பேட்டி: சோமாஸ்