பாட்னா: இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தலுக்குள், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறையிலிருந்து வெளிவருவதற்கான ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர் அவரின் கட்சியினர்.
மாட்டுத் தீவன வழக்கில் சிறை தண்டனைப் பெற்றுள்ள லாலு பிரசாத், தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், அவர் சிறையிலிருந்து வெளிவந்து பிரச்சாரம் செய்யாத காரணத்தால், பீகாரில் அவரின் கட்சி 1 இடத்தில்கூட வெல்லாமல் போனது. அதேசமயம், இந்தாண்டு அக்டோபரில் பீகாருக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது.
இப்போதைய நிலையில் லாலுவின் கட்சி பீகார் சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனவே, வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலில் நிதிஷ்குமார் – பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க, லாலுவின் கட்சியை முன்னிறுத்தும் முடிவில் பிரஷாந்த் கிஷோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தேர்தல் காலத்திற்குள் லாலுவிற்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரின் கட்சியினர்.