டெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.
அடிப்படை சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு, தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை அடிப்படையில் மொபைல் போன் விற்பனை, டிவிடெண்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம், 2004 முதல் 2015 வரை கணக்கிட்டு தொகையை அரசுக்கு செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.47 லட்சம் கோடியை உடனடியாக செலுத்தும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கடுமையான வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி இருக்கிறது. நீதிமன்றம் கூறியதாவது: நீதிமன்ற ஆணையை உத்தரவை ஏற்க மறுத்து முறையீடுக்கு மேல் முறையீடு செய்யும் இந்த முட்டாள்தனத்தை யார் துவக்கி வைத்தது?
சட்டம் என்பதே இல்லையா? சட்டத்தை பின்பற்ற முடியாதவர்கள் நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது. அவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்… நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கடுமையாக தெரிவித்துள்ளது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் 10,000 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.
முன்னதாக இந்த விவகாரத்தில் வோடபோன் நிறுவனம் 50,000 கோடியும், பாரதி ஏர்டெல் ரூ.35,500 கோடியும் பாக்கி வைத்துள்ளது.