சென்னை:
டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழக அரசு ஏமாற்றுகிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
”ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளை ஏமாற்றுவதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து நாடகம் ஆடுகிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை மதுரவாயல் தி.மு.க செயலாளர் காரம்பாக்கம் கணபதி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர், பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, “இன்று செய்தித்தாள்களில் ஒரு செய்தியைப் பார்த்தேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைப் போல எல்லோரும் பணியாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கிறாராம். அவரைப் போல பணியாற்றுவது என்றால் எப்படி? நாட்டில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள் போலவா? என்று கேள்வி எழுப்பியவர்,
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என இன்று நேற்றல்ல; தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
வேளாண் மண்டலமாக ஆக்கினால் அது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை யார் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட அ.தி.மு.க அரசுக்கு இல்லையே? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது மத்திய அரசு.
ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை என்னாகும்? அந்தப் பணிகளை நிறுத்திய பிறகு, வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என உறுதியளித்த பிறகு, மத்திய அரசுதான் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளதா? அதை முதலமைச்சர் வெளிப்படையாகச் சொல்வாரா?
இவ்வாறு கூறினார்.