டோக்கியோ:
ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 174 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைமண்ட் பிரின்செஸ் என்ற சொகுசு கப்பல் 3700 பயணிகளுடன் கடந்த மாதம் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்தது. இதில், 57 நாடுகளைச் சேர்ந்த 2700 பயணிகளும் சுமார் 1000 ஊழியர்களும் பயணம் செய்தனர்.
முன்னதாக, இக்கப்பல் கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி ஜப்பானில் இருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25ம் தேதி வந்தடைந்தது அதில் பயணம் செய்த ஒரு ஹாங்காங் பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதனால், அந்த கப்பலை ஜப்பான் தனது நாட்டு எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், கப்பல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, நடுக்கடலில் தத்தளித்து வருகிறது.
அந்த கப்பலுக்கு ஜப்பான் நாட்டைச் சேர்நத் மருத்துவக் குழுவினர் சென்று வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆரம்பதில் ஒருசிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 174 பேருக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஜப்பான் சுகாதார துறை மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அந்த கப்பலில் சிக்கி உள்ள இந்தியர்கள் உள்பட தமிழர்களை மீட்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.