சென்னை:
லயன்ஸ் கிளப் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 108 ஏழை, எளிய ஜோடிகளுக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலை திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது, மண்மகனிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விஜிபி சந்தோஷம், என்.ஆர்.தனபாலன் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருமணத்த நடத்தி வைத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருமணம் என்பது மிகவும் புனிதமானது. இரு மனம் கலக்கும் திருமணம் ஓரு ஆணும், பெண்ணும் இணைந்து, இல்லறம் நடத்த சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை ஒப்பந்தம் மட்டுமல்ல; அது, காலகாலத்திற்கும் தொடர்ந்திடும், ஒப்பு உயர்வற்ற பந்தம்.
தவமிருந்து பெற்ற பெற்றோர்கள் மனம் உவந்து ஆசி வழங்க, உற்றார் உறவினர் திரளாகக் கூடி, நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக் கூற, நாதஸ்வரங்கள் இசைக்க, கெட்டி மேளங்கள் முழங்க, முகம் நிறைந்த சிரிப்புடன் மணமகன் மங்களநாணை சூட்ட, அகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மணமகள் அதனை ஏற்க, மிக அழகாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த திருமண வைபவம் இதயத்திற்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் மகத்துவமான நிகழ்ச்சி ஆகும்.
பொருளாதார வசதியற்ற காரணத்தால் ஏழைப் பெண்களின் திருமணங்கள் தள்ளிப் போவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களது திருமணக் கனவை நனவாக்கவும், பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தி உறுதி செய்யவும், அம்மா முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத திட்டமாக, தாலிக்குத் தங்கம் வழங்கி திருமணத்திற்கு நிதிஉதவி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.
இன்று நடைபெறும் இனிய திருமணத்தின் மூலம் இல்வாழ்க்கையில் இணைந்திருக்கும் தம்பதியினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதில் வள்ளலாகத் திகழ வேண்டும். வாழ்க்கையில் என்றும் அகலக்கால் வைக்காமல், சிக்கனத்தோடும், சிறப்போடும், தன்னம்பிக்கையுடனும், குடும்பத்தினை நீங்கள் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.