விழுப்புரம்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட  7 பேர் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட  ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அந்த  கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.

இந்த கோப்பு தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆளுநர் அலுவலகம்  இத்தனை மாதங்களாக கோப்புகளை நிலுவையில் வைத்திருப்பது ஏன் என  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கான பதிலை ஆளுநரிடம் தமிழக அரசுதான் கேட்டுப்பெற்று,  இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7  பேர் விடுதலை குறித்து ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டோம்,  7 பேர் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்  என   தெரிவித்துள்ளார்.