சென்னை
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நிதிநிலை அறிக்கை மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2020-21 க்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலையைச் சரி செய்வதற்கான எவ்வித திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லாதது குறித்துப் பல பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தென் இந்திய வர்த்தக சம்மேளனம் நடத்திய ஒரு நிகழ்வில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் உள்ள குறைகளை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து மாற்ற வேண்டும். சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றிய நிதி அமைச்சரின் உரையில் எவ்வித விஷயமும் இல்லை. பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் சவால்களை அரசு இன்னும் மறுத்து வருகிறது.
என்னாலும் இந்த அறிக்கையில் உள்ள குறைகள் குறித்து160 நிமிடங்கள் அனைவரும் ரசிக்கும்படி உரையாற்ற முடியும், இந்த நிதிநிலை அறிக்கை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வரும் வகையில் அமையவில்லை. தற்போதைய பொருளாதார நிலைக்குச் சரியான தீர்வு ஏழை மக்களிடம் நேரடியாகப் பணத்தை அளிப்பதற்குப் பதில் அரசுக்கு செலவினங்களை அதிகரிக்கும் திட்டங்கள் அதிகம் உள்ளன.
மத்திய அரசு பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பை விடப் புனித நதி நீர் சுத்திகரிப்பு, 100 புதிய விமான நிலையங்கள் அமைத்தல் ஆகியவை நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் இந்த திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி இருக்க வேண்டும் மாறாகக் கடந்த 2019-20 ஆம் வருடம் அளித்த ரூ.71000 கோடியை 2020-21 ஆம் வருடம் ரூ.61500 கோடியாகக் குறைத்துள்ளார். அடுத்ததாக விவசாய உதவி நிதி என்னும் பெயரில் வருடத்துக்கு ரூ.6000 அளிப்பது நல்ல திட்டமாக இருந்தது. இந்த திட்ட தொகையை ரூ.12000 ஆக மாற்றி இருக்க வேண்டும். அல்லது இதைக் குத்தகை விவசாயிகளுக்கும் அளித்திருக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் அளித்திருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததைப் போல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நிதி நிலை அறிக்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உடைப்பதாக அமைந்துள்ளது. அதே வேளையில் எல் ஐ சி பங்குகள் விற்பதற்கு அரசு சரியான விளக்கம் அளித்த பிறகே அது குறித்துவிம்ர்சிக்க முடியும். ஆனால் சரியான காரணம் இன்றி அரசு பொருள் ஈட்ட மட்டுமே இதைச் செய்கிறது என்றால் நாங்கள் அதை எதிர்ப்போம்.
நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் போது எதிர்க்கட்சிகளின் ஆலோசனையையும் அரசு தனது கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுடைய தலைமை நிதி ஆலோசகர் அளிக்கும் யோசனைகள் சரி இல்லை என்றால் அவரை மாற்றுங்கள். வசூலில் தோல்வி அடைந்துள்ள ஒரு திரைப்படம் போல இந்த நிதிநிலை அறிக்கை மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளது” எனக் கூறி உள்ளார்.