சென்னை
ஆந்திராவில் இரு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்துக்கு இடம் பெயர பேச்சு வார்த்தைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசத்திடம் இருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்துள்ள பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகிறார். அத்துடன் அந்த அரசு எடுத்துள்ள பல முடிவுகளும் தற்போது மாற்றப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தனது புதிய தொழிற்சாலையைத் திறந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்கியது. சுமார் 2.3 கோடி ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இந்திய மற்றும் ஏற்றுமதிக்கான வாகனங்கள் தயார் செய்யப்பட உள்ளன.
ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை உலகின் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த தொழிற்சாலை 3 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும். அத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12000 வேலை வாய்ப்புக்களை இந்த தொழிற்சாலை உருவாக்கி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஆந்திர மாநில அரசு அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 75% பணியை மாநிலத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பல பணிகளுக்குத் தேவையான ஊழியர்களை நியமிக்க இந்த நிறுவனத்துக்கு மிகவும் கடினமாக உள்ளதாக நிறுவன தரப்பு தெரிவித்துள்ளது.
அடுத்தபடியாக முந்தைய அரசுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சாரம் கட்டணம், வரிகள், நில கட்டணங்கள் ஆகியவற்றில் சலுகைகளுக்கான ஒப்பந்தம் இட்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசு இதுபோல பல வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தங்களை மாற்றி அமைத்து வருகிறது. இது குறித்து ஜப்பான் நாட்டுத் தூதுவர் ஆந்திர அரசுக்கு தனது கடிதம் மூலம் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
எனவே கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாகவும் இது குறித்த சாத்தியங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குத் தேவையான உதிரிப்பாகங்களை தமிழகம் அளித்து வருகிறது. எனவே இந்நிறுவனம் தனது தொழிற்சாலையைத் தமிழகத்துக்கு இடம் பெயர ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து கியா மோட்டார்ஸ் நிர்வாகம் தற்போதுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தை விட்டு இடம் பெயரும் எண்ணம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அதே வேளையில் தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைகளை குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் அமைந்துள்ள கியா மோட்டார்ஸ் துணை நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் மூலம் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.