கோவா: பசுக்களை சாப்பிடும் புலிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோவா என்சிபி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ கூறி உள்ளார்.
கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் 5 பேரால் ஒரு புலி மற்றும் அவளது மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது தொடர்பாக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவன ஈர்க்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவையில் எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ, மனிதர்கள் தண்டிக்கப்படும்போது பசுக்களை சாப்பிடும் புலிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
புலி ஒரு மாடு சாப்பிடும்போது அவருக்கு என்ன தண்டனை? ஒரு மனிதன் பசுவை சாப்பிடும்போது, அவன் தண்டிக்கப்படுகிறான்.
வனவிலங்குகளைப் பொருத்தவரை, புலிகள் முக்கியம், ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை, மாடுகள் முக்கியம் என்றார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புலிகள் தங்கள் கால்நடைகளைத் தாக்கியதால் உள்ளூர்வாசிகள் புலிகளை கொன்றனர். கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.