டெல்லி:
டெல்லியில் துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து உள்ளது.
டெல்லி மாநில சட்டமன்றத்துக்கு வரும் 8-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே பெண்களுக்கு பஸ், ரயில்களில் இலவச பயணம் அறிவித்துள்ள நிலையில், மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்கும்போதே இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ 1.கோடி நிவாரணம், தடையில்லா மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர், பள்ளிகளில் தரமான கல்வி, தேசபக்தி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்றவை அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது.
மேலும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆரம்பித்தல், பள்ளி இறுதிப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி, மேலும் புராரி, கிராரி, பிஜ்வசன், நரேலா, கரவால் நகர், மேங்கோலுரி போன்ற இடங்களை மெட்ரோ ரயில் திட்டம் மூலம் இணைத்தல், 500 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடங்கள் மெட்ரோ ரயில் மூலம் இணைத்தல் என்பன உள்ளிட்ட 28 அம்சங்கள் ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.