மும்பை: மராட்டிய முதல்வரும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே 2ம் தேதியன்று, சாமனாவுக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் பாஜகவும் சிவசேனாவும் ஒன்று சேர வாய்ப்புள்ளது என்றும், நாங்கள் அவர்களுடன் மீண்டும் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டோம் என்று நான் கூறவில்லை“, என்று தெரிவித்தார்.
“அவர்கள் மட்டும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால், என்னிடம் பொய் சொல்லாதிருந்திருந்தால், ஒரு போதும் நான் முதல்வர் ஆகியிருக்க மாட்டேன். கூட்டணி அமைக்கும்போது முடிவு செய்யப்பட்டதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை“, என்று கூறினார்.
முன்னதாக, சிவசேனா, பாஜக வின் 2020 பட்ஜெட்டை, “வெறும் வார்த்தைகளின் விளையாட்டு“, என்று குற்றம் சாட்டியது. “அது மோடி அரசாங்கத்தின் நிலை“, என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின், 18,926 வார்த்தைகள் கொண்ட சாதனை உரையில் எந்த பொருளும் இல்லை என்றும் நிதியமைச்சரும், பொருளாதாரமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் சாமனாவின் தலையங்கம் கூறியது.
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி கூட்டணி ‘நெறிமுறையற்றது‘ என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்த தாக்கரே, சிவசேனாவுக்கு, பாஜக நெறிமுறைகளைக் கற்பிக்கக் கூடாது என்று கூறினார். அவர் மேலும், “ஃபட்நாவிஸ் பிற கட்சிகளை உடைத்து அதன் தலைவர்களை அவருடன் சேர்த்துக்கொண்டார் எனவும் ஏன் முழு கட்சியுடனும் சேரவில்லை? இந்த தலைவர்களுக்கு வேறு சித்தாந்தம் இருக்கிறதா?“ என்று பாஜகவை சாடினார்.
அவர் ஒரு கூட்டணியை உருவாக்கும் கட்சிகளுக்கிடையேயான கருத்தியல் வேறுபாடு குறித்து பேசிய தாக்கரே, “கட்சிகளுக்கிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் ஒரு கூட்டணியில் இருந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன“, என்று கூறினார்.