டில்லி
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பரஸ்பர நிதி வருமானத்துக்கு 10% வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் புதிய வருமான வரி திட்டத்தை அறிவித்தார். இந்த புதிய திட்டத்தின்படி முதலீடுகள் உள்ளிட்ட பல இனங்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்தாதவருக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் வரிக் குறைவு ஏற்படும் என பொதுவாகக் கூறப்பட்டாலும் பலரும் தங்கள் சேமிப்புகள் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவற்றைக் கழித்து விட்டு பழைய திட்டத்தின் படி வரி செலுத்தும் போது குறைவாக வரி செலுத்தலா எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இது குறித்து பத்திரிகை.காம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வெளி வந்துள்ள தகவலின்படி பரஸ்பர நிதியின் மூலம் பெறும் வருமானம் ரூ.5000க்கு அதிகமாக இருந்தால் 10% வருமான வரி பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிய வந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி பரஸ்பர நிதி, நிறுவனப் பங்குகள் போன்றவற்றில் இருந்து வரும் வருமானத்துக்கு விலக்கு கிடையாது. எனவே இவ்வாறு பிடிக்கப்படும் வருமான வரியை மீண்டும் பெற முடியாது.
வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள வைப்பு நிதியின் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட போதிலும் அதைக் கணக்கில் காட்டி முன்பு திரும்பிப் பெறும் வசதி இருந்தது. புதிய வருமான வரி திட்டத்தின்படி குறைந்த வரி விகிதம் தேவைப்படுவோர் எவ்வித விலக்கும் கோர முடியாது. குறிப்பாக அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதம் குறையும் என்றாலும் இந்த வரியை மீண்டும் பெற முடியாது.