புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக கூறிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மனநிலை சரியில்லை என்றும் அவர்மீது எப்ஐஆர் பதிவுசெய்ய வேண்டும் எனவும் ஆம்ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, கெஜ்ரிவால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

நிலைமை இப்படியிருக்க, டெல்லி கரவல் நகரில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் நம்பவில்லை. பாகிஸ்தானில் உள்ள எஜமானர்களிடம் சொல்லி, தனக்கு ஆதரவாக ட்வீட் செய்ய வைக்கிறார்” என தொடர்பில்லாமல், தன் பாணியில் பேசினார். இதற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆம்ஆத்மி நாடாளுமன்ற சஞ்சய் சிங் கூறியதாவது, “கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக யோகி கூறுகிறார். இதை அவர் நிரூபிக்க வேண்டும். மனநிலை சரியில்லாத யோகிக்கு டில்லியில் சிறந்த மனநல டாக்டரை கொண்டு இலவச சிகிச்சை மேற்கொள்ளலாம்.

யோகியின் பேச்சுக்காக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக பேச தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டிருந்தும் இன்னும் அமைதியாக உள்ளது ஆணையம். இதற்காக தேர்தல் ஆணையம் முன்பு தர்ணாவில் ஈடுபட இருக்கிறோம்” என்றார் சஞ்சய் சிங்.