சென்னை:
அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரின் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் மரணம் அடைந்து விட, மற்றொருவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள் என சென்னை மகிளா நீதி மன்றம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 15 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 3வது குற்றவாளியான ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையும், 4-வது குற்றவாளியான எரால் பிராஸ்க்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மற்ற குற்றவாளிகளான சுகுமாறன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், தீனதயாளன், ராஜா, சூர்யா, ஜெயராமன், உமாபதி ஆகியோருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் முதல் பூட்டிய அறைக்குள் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 1ந்தேதி ((பிப்ரவரி 1, 2020) தீர்ப்பு வழங்கப்பட்டது. 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இன்று தண்டனை விவரங்கள் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி மஞ்சுளாவால் அறிவிக்கப்பட்டது.
மேலும் குற்றவாளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால் அபராதம் ஏதுமில்லை. சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நன்னடத்தை அடிப்படையில் வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.