புதுடெல்லி: தேசிய தலைநகரில், குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) 1ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியில், 36 வேட்பாளர்கள் (51%) தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர்.

இந்த நிலைப்பாட்டில், பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது.  67 இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் 17 பேர் பல்வேறு குற்றங்களுக்காக குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ் 66 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 10 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆகவே, இம்மூன்றில் காங்கிரஸ் கட்சியே சிறந்ததாகத் தெரிகிறது.

மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 672. அதில் 133 வேட்பாளர்கள் (20%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் அறிக்கை கூறுகிறது. 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 114 வேட்பாளர்கள் (17%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குப் பதிவுகள் மற்றும் பிற விவரங்களைத் தொகுப்பானது, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திலிருந்த, அவர்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் வேட்பு மனுக்களை அடிப்படையாகக் கொண்டது.

ஏடிஆர் மேற்கொண்ட ஆய்வின்படி, 104 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 32 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு வேட்பாளர்கள் கொலை முயற்சி தொடர்பான வழக்கை எதிர்கொண்டிருக்கின்றனர். மேலும் 20 பேர் ஏற்கெனவே பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.