டெல்லி: வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5ஆயிரம், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் களைகட்டி வருகிறது. இந்த முறை யார் தலைநகர் டெல்லியின் முதலமைச்சராக யார் வருவார் என்று பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
அந்த தேர்தல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் மீண்டும் கொண்டுவரப்படும். டெல்லி போக்குவரத்து துறைக்கென 15 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
அனைத்து அங்கீகாரமற்ற காலனிகளும் முறைப்படுத்தப்பட்டு அவற்றின் மேம்பாட்டுக்காக 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். தற்போதைய வடிவில் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு அமல்படுத்த பட மாட்டாது.
மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், குறைந்த விலை உணவு வழங்க 100 இந்திரா கான்டீன்கள் போன்ற வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.