திருச்சூர்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவி உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜா கூறியிருக்கிறார்.
இந்தியாவில் முதன் முதலில் கேரளத்தில்தான் கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உகான் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரள மாணவி சீனாவில் இருந்து கேரளாவில் சொந்த ஊருக்கு திரும்பினார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, கொரானா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருடன் தொடர்பு கொண்டிருந்த 69 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தம் 1793 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.