டெல்லி: 6 மாதம் தடை விதிக்கப்பட்டது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா 2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பிரபல நகைச்சுவை குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் ரிபப்ளிக் டிவி ஆசிரியரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் குணால் கம்ரா வெளியிட்டார். அதில், அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் பல கேள்விகளை கேட்டுள்ளார். அர்னாப் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்க  நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனவும் கேள்வி எழுப்புகிறார் குணால்.

அந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்க தடை விதித்தது. இண்டிகோவை போன்று, ஏர் இந்தியா நிறுவனமும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா ஏர் இந்தியா விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.

இந்த தடை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் தடை குறித்து விளக்கம் அளிக்க வேண்டி, 2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் குணால் கம்ரா.

திட்டமிடப்பட்ட தமது நிகழ்ச்சிகளை ரத்து செய்ததன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மன வலி மற்றும் இழப்புகளுக்கு விமான நிறுவனம் இந்த தொகைளை அளிக்க வேண்டும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்த தடையை நீக்க வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி உள்ளார்.