கான்பெரா: ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பெரா மற்றும் இதரப் பகுதிகளில் பரவிவரும் காட்டுத் தீயால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பிரச்சினை கடந்த பல மாதங்களாகவே ஆஸ்திரேலியாவை பாடாய்படுத்தி வருகிறது. உலகப் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றுதான் இது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
நியூசெளத்வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா உள்ளிட்ட பல பகுதிகள் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எக்கச்சக்கமான மரங்கள் மற்றும் ஏராளமான உயிரினங்கள் இதுவரை அழிந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீயின் தாக்கம் அதிகரித்து வருவதாய் கூறப்படுகிறது. அந்நாட்டில் கனமழைப் பெய்தாலும் நிலைமை தணிந்தபாடில்லை. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் தீ நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கான்பெராவில் அவசரநிலை அறிவிப்பு செய்யப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.