டில்லி

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகக் கச்சா எண்ணெய் தேவை குறைவால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில்  சுமார் 259 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   மேலும் சுமார் 18000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார மையம்  மருத்துவ அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.    அனைத்து நாடுகளும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சீனாவின் முக்கிய தொழிலான வர்த்தகம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அத்துடன் சீனாவில் உள்நாட்டுப் போக்குவரத்து மட்டுமின்றி சீன நாட்டவர் மற்ற நாடுகளுக்குச் செல்லவும் பல உலக நாடுகள் தடை விதித்துள்ளன.  குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்த பயணத்தடை கடும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் சீனாவுக்கு வர்த்தகப் பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது அந்தப் பயணம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இதனால் எரிபொருள் தேவை வெகுவாக குறைந்துள்ளது.  குறிப்பாக விமான எரிபொருள் தேவை மிக மிகக் குறைந்துள்ளது.   அத்துடன் சீனாவில் எண்ணெய் பொருள் சுத்திகரிப்பு தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய்க்குக் கிராக்கி குறைந்துள்ளது.  இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்றைய சந்தை நிலவரப்படி கச்சா எண்ணெய் பாரலுக்கு 51.14 டாலராகக் குறைந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே வீழ்ச்சியில் இருந்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்கா ஈரான் தகராறு காரணமாகச் சற்று உயர்ந்திருந்தது.  தற்போது இந்த விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் வருமானம் வெகுவாக குறையும் எனவும் இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில்  சந்திர புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து இன்று மீண்டும் பணிகள் துவங்குவதாக இருந்தது.   இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது.   ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகச் சீன அரசு இந்த விடுமுறையை மேலும் நீட்டித்துள்ளது.   எனவே கச்சா எண்ணெய் தேவை மேலும் குறைந்து அதன் விலையும் குறைவதால் பொருளாதார பாதிப்பு ஏற்படுவது தொடரும் எனக் கூறப்படுகிறது.