வாஷிங்டன்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் சீனாவுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 259 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருக்கும் எனச் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தாக்குதல் உலகின் வேறு சில நாடுகளிலும் தென்பட்டதால் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
இதைப் பின்பற்றி அமெரிக்க அரசும் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் அமெரிக்காவில் யாரும் மரணம் அடையவில்லை. பாதிக்கப்பட்டுள்ள ஒரு அமெரிக்கர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆயினும் அமெரிக்கா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்க மக்களுக்குச் சீனா செல்ல அந்நாட்டு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பிய வெளிநாட்டவர் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனா சென்று திரும்பியவர்கள் ஹுபெய் மாநிலத்துக்குச் சென்றிருந்தால் அவர்கள் அவசியம் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.
சீனாவின் மற்ற பகுதிகளுக்கு சென்று திரும்பியவர்கள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அந்த பரிசோதனை முடிவையொட்டி அவர்களும் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சுகாதாரம் மற்றும் மனித வள நலச் செயலர் அலெக்ஸ் அசார மருத்துவ அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்ஃப்ரான்சிஸோ, சியட்டில் மற்றும் ஹோனாலூலு ஆகிய அமெரிக்காவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் தரை இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.