சென்னை:
கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம் , அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக, பாஜக கூட்டணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா, தேமுதிக தலைமையகமான கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா 29-வது ஆண்டு திருமண நாளையொட்டி அவர்களுக்கு, விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீசும் அவரது துணைவியாரும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதையடுத்து, தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அக்கட்சி சார்பில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்து, அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
பின்னர் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணித் தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம். 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார். அடுத்த தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும்.
2021-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம் என்றவர், 2021-ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போமா இல்லையா என்பதை தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.
பிரேமலதாவின் எச்சரிக்கை பேச்சு, அதிமுக, பாஜக கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.