டில்லி
ஹமாரா பஜாஜ் என்னும் விளம்பர கோஷத்துக்கு பின் இருந்த ராகுல் பஜாஜ் ஓய்வு பெற உள்ளார்.
வாகன உற்பத்தி உலகில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாஜஜ் நிறுவனமும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா மட்டுமின்றி வெளி நாட்டினரையும் பஜாஜ் இரு சக்கர வாகனங்கள் மிகவும் கவர்ந்துள்ளன. இந்த நிறுவனத்தை உருவாக்கிய பஜாஜ் குடும்பத்தினரின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் ஆவார். இவர் கடந்த 1970 ஆம் வருடம் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பு ஏற்றார்.
அப்போது இரு சக்கர வாகனங்கள் என்பது சொகுசு பொருட்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அதை அத்தியாவசிய பொருளாகவும் தினசரி உபயோகப் பொருளாகவும் மாற்றியதில் ராகுல் பஜாஜ் பெரும் பங்கு வகித்தார். அப்போது இருந்த லைசன்ஸ் ராஜ் சமயத்தில் இரு சக்கர வாகனங்களில் வெளிநாட்டு நிறுவனப் போட்டிகளைச் சமாளித்து பஜாஜ் நிறுவனத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வந்தார்.
இந்தியச் சந்தையை வெளிநாட்டினரிடம் இருந்து மீட்டார் எனச் சொல்லும் அளவுக்கு அதன் பிறகு இந்திய இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் வெளியாகின. இதன் மூலம் அவர் ஒரு புதிய உள்நாட்டு வர்த்தகத்தை உருவாக்கியவர் எனப் புகழ் பெற்றார்.
கடந்த வருடம் மத்திய அரசு பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்க நிறுவனங்கள் பயப்படுவதாகத் தெரிவித்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் இவ்வாறு பேசினார். அவரின் வெளிப்படையான அணுகுமுறைக்கு இது மற்றுமோர் உதாரணமாக அமைந்தது.
தற்போது பஜாஜ் நிறுவனத்தை அவர் மகன்களான ராஜிவ் மற்றும் சஞ்சீவ் நிர்வகிக்கத் தொடக்கி உள்ளனர். இதில் ஆட்டோமொபைல் பிரிவை ராஜிவ் மற்றும் நிதிப்பிரிவை சஞ்சீவ் ஆகியோர் நிர்வகிக்க உள்ளனர். எனவே ராகுல் பஜாஜ் வரும் மார்ச் முதல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலம் பணி புரிந்த ஹமாரா பஜாஜ் குலத் தலைவருக்கு அந்நிறுவனம் பிரியா விடை அளிக்க உள்ளது.