திருவனந்தபுரம்
கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள ஊகான் நகர மக்களுக்குச் சேவை செய்யக் கேரள மருத்துவர்களும் செவிலியர்களும் துணிச்சலாக சென்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஊகான் நகரில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. தற்போது அந்த வைரஸ் சீனா முழுவதும் பரவி உள்ளது இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஊகான் நகரில் சீன அரசு 10 நாட்களில் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனை அமைத்து சிகிச்சைகள் நடந்து வருகின்றன இந்நிலையில் ஊகான் நகர மக்களுக்குச் சிகிச்சை செய்ய கேரளாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய குழு சென்றுள்ளனர்.
இவர்களின் துணிச்சலைப் பாராட்டி டிவிட்டரில், ”கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய ஊகான் நகர் சென்றுள்ள துணிவு மிக்க மருத்துவர்களையும் செவிலியர்களையும் உறவினர்கள் வழி அனுப்பி வைத்தனர். இது கொரோனா வைரஸ் தற்கொலைப் படை ஆகும். இவர்களில் எத்தனை பேர் திரும்பி வருவார்கள் என்பது தெரியாது. இறைவன் இவர்களை ஆசிர்வதிக்கட்டும்” எனப் பதியப்பட்டுள்ளது.