சென்னை:
போலி சான்றிதழ் வழங்கியதாக ஆந்திர சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
சமீபத்தில், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், தான் ஆந்திராவில் சட்டம் பயின்றுள்ளதாக கூறி, சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதில் சந்தேகம் அடைந்த பார் கவுன்சில் நிர்வாகிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சென்னையில் வில்லிவிக்கத்தில் வசித்து விபின் ( வயது59) தான் தெற்கு ரயில்வேயில் கார்டாக பணியாற்றி வந்தபோது, அரசு அனுமதியின்றி, அனுமதியின்றி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பசவ ராம தாரகம் நினைவு சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்து பட்டம் பெற்றதாக கூறினார்.
இதில் சந்தேகம் அடைந்த பார் கவுன்சில், இதுகுறித்து அந்த கல்லூரியில் விசாரணை நடத்தியது. அப்போது, விபின், கல்லூரிக்கு செல்லாமலேயே போலியான வருகைப்பதிவு பெற்று சட்டப்படிப்பு முடித்துள்ள விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது பார் கவுன்சில் விண்ணம் நிராகரிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக காவல்துறை யிலும் புகார் அளிக்கப்பட்டு, விபின் மற்றும் அவருக்கு உதவியதாக மேலும் 2 வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விபினுக்கு, வருகைப்பதிவேடு போலியாக தயாரித்து, சான்றிதழ் அளித்த சட்டக் கல்லூரியின் முதல்வர், ஹிமவந்தகுமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, தமிழக பார் கவுன்சில், வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழை சரிபார்க்கும் வகையில், பார் கவுன்சில் உறுப்பினர்கள், தங்களது சட்டப்படிப்பு பட்டயச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.