புதுடெல்லி: ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்துவதற்கு எளிதாக அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; காவிரி டெல்டா பகுதியில், அனைத்துவகை எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, 20 ஆயிரம் கோடி மதிப்பில் 341க்கும் மேற்பட்ட ஆய்வுக் கிணறுகளை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தோண்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டங்களை துவக்குவதற்கு முன்பாக, மாநில அரசிடம் அனுமதி கேட்பது அவசியம். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான நடைமுறையாகும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் எதிரானது.
ஏராளமான விவசாயிகள் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதிக்கும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.