மும்பை: பொதுமக்களுக்கு ரூ.10க்கு மதிய உணவு வழங்கக்கூடிய சிவபோஜனா எனும் பெயரிலான திட்டத்தை மராட்டிய அரசு குடியரசு தினத்தில் துவக்கியுள்ளது.

இந்தத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம் குறித்து சிவசேனா கட்சி தனது தேர்தல் பிரச்சாத்தில் உறுதியளித்திருந்தது.

மும்பையில், மாவட்டப் பாதுகாப்பு அமைச்சர் அஸ்லம் ஷேக் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதேபோன்ற மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் இத்திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ரூ.10 விலையில், 2 சப்பாத்தி, சோறு, பருப்பு மற்றும் பொறியல் ஆகியவை, பகல் 12 மணிமுதல் 2 மணிவரை வழங்கப்படும். முதற்கட்டமாக, ஒரு உணவகத்தில் 500 பேர் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவமனைகள், பேருந்து & ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற சாதாரண மக்கள் கூடும் இடங்களில் இத்திட்டத்திற்கான உணவகங்கள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.