டில்லி:

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில்உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில், அதிமுகவை கைப்பற்றி முதல்வராக சசிகலா முயற்சி மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறைக்கு செல்ல, முதல்வராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு, அவரது  தலைமையில் அரசு அமைந்தது. இதையடுத்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில்,  ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த னர். அவர்களை கட்சித்தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கக் கோரி திமுக சார்பில் சபாநாயகரிடம் புகார் கொடுத்தும் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், திமுக எம்எல்ஏ  சக்கரபாணி, டிடிவி தினகரன் ஆகியோர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று  வழக்கை விசாரிக்க உயர் நீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வழக்கை விரைந்து முடிக்க திமுக தரப்பில் தலைமைநீதிபதியிடம் முறையிட்டும், இதுவரை விசாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில்சில் இன்று தலைமை நீதிபதி பாப்டேவை சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், சபாநாயகர் வழங்கும் கால அவகாசம் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதி மன்றம் வழங்கி தீர்ப்பை சுட்டிக்காட்டி, எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரணைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.