நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளை எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதிகள் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி கைப்பற்றப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது, அந்த வழியாக ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகளை தடுத்து விசாரணை நடத்திய காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சனை, பயங்கரவாதிகள் கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை அடைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த படுகொலையை செய்த பயங்கரவாதிகள் கேரளா வழியாக தப்பிச்சென்றதை கண்டு பிடித்தனர். அதைத்தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடக காவல்துறை உஷார் படுத்தப்பட்டது. கொலையாளிகள் கேரளா மாநிலம் திருவிதாங்கோட்டு அப்துல் சமீம், கோட்டாறு தவுபிக் ஆகியோர் என்பது நிரூபணமானது.
மேலும், கேரளாவில் சிலரும், கர்நாடகாவில் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் எஸ்ஐ வில்சனை கொலையில் பலர் தொடர்பு உள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் இஜாஜ் பாட்சா என்பவரும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கண்டனர்.
அதில், வில்சன் இத்தாலி நாட்டில் தயாரான துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், தலைமறைவு குற்றவாளிகள் 2 பேரை உடுப்பி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், தடுப்புக் காவலிலுள்ள குற்றவாளிகளான அப்துல் சமீம் , தவுபிக் ஆகியோர் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலைக்கு தாங்கள் பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் வீசியதாக தெரிவித்தனர்.
அவர்களை அங்கு அழைத்துச்செந்ற காவல்துறையினர், அவர்கள் குறிப்பிட்ட ஓடையில் இருந்து துப்பாக்கியை மீட்டனர். அதைத் தொடர்ந்து வில்சனை வெட்டிய கத்தியையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தம்பானூர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து மீட்கப்பட்டது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.