சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்ட நிலையில், முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிகள் சமீபத்தில் வெளியானது. இதில் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற, முதல் 100 இடங்களை பிடித்திருந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்த விசாரணையில் தேர்ச்சி பெற்றவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்(1606), கீழக்கரை (1608) தேர்வு மையங்களில் தேர்வு எழுதிது தெரிய வந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களிடம் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை நடத்தியது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய டிஎன்பிஎஸ்சி, முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்த நிலையில், இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. தேர்வு எழுதிய 99 பேரையும் வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர். புகார் தொடர்பாக ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.