டாவோஸ்: நான் மட்டும் மத்திய அமைச்சராக இல்லாவிட்டால், ஏர் இந்தியா பங்குகளை வாங்கியிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறி இருக்கிறார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும், சர்வதேச பொருளாதார அமைப்பு மாநாட்டில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசின் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் உட்பட சில பொதுத்துறை நிறுவனங்ள், பல ஆண்டுகளாகவே, நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்நிறுவனங்களை மீட்க பங்குகளை விற்பனை செய்யும் பணிகள், முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நான் மத்திய அமைச்சராக பதவி வகிக்கவில்லை எனில், ஏர் இந்தியா பங்குகளை ஆர்வமாக வாங்கியிருப்பேன். சர்வதேச தரம் வாய்ந்த விமானங்களை கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், நிச்சயம், பணம் ஈட்டித்தரும் தங்க சுரங்கம்.
மத்தியில், பாஜக அரசு, முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் பொருளாதாரம், மோசமாக இருந்தது. அதை, சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுத்துறை வங்கிகள், சிறப்பாக பணியாற்றுவதில்லை என்ற எண்ணம், இந்த சபையில் உள்ள அனைவருக்குமே இருக்கிறது என நினைக்கிறேன். உலக அளவில், 2008 – 09 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, தனியார் வங்கிகளே காரணம்.
தற்போது, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன்களை வசூலித்து, வங்கிகளை மீட்டெடுக்க, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பேசினார்.