டெல்லி:
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC – National Register of Citizens) மாற்றாக, தேசிய வேலையற்றோர் பதிவு (National Register of Unemployed – NRU) திட்டத்தை இளைஞர் காங்கிரஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கோலம் மூலம் பொதுமக்கள் No NRC என்று எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அதே பாணியை மற்ற மாநிலங்களிலும் என்ஆர்சி எதிர்பாளர்கள் பின்பற்றினர்.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், திரையுலக நட்சத்திரங்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் என்ஆர்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்த போராட்டங்களை வன்முறையாக்க மத்திய அரசு விரும்பினாலும், போராட்டக்காரர்கள் அமைதி யாகத்தான் இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் கல்வித் தகுதி கேள்விக்குறியாக இருக்கிறது.
நாட்டுக்கு இப்போதைய தேவை 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலையோ, தேசிய குடியுரிமை பதிவேடோ இல்லை. வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் படிக்காத குழந்தைகளின் பட்டியலைத்தான் அரசு தயாரிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுபோல சமூக ஆர்வலர்களும், பொருளாதார வல்லுநர்களும் மோடி அரசு என்ஆர்சி போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதற்கு பதில், நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க புதிய திட்டங்களை கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று ஏமாற்றி, ஆட்சியை பிடித்த மோடி தலைமை யிலான பாஜக அரசு, பதவி ஏற்றது முதல், தனது திறமையற்ற நிர்வாகத்தால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசு நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. 45வயது வரை வேலைக்காக காத்திருக்கும் அவலங்கள் அரங்கேறி வருகிறது. நாடு முழுவதும் வேலையில்லாமல் கோடிக்கண்ககான இளைஞர்களும், இளைஞிகளும் கதறி வருகின்றனர். ஆனால்,மோடி அரசு அதுகுறித்து கவலைப்படாமல், மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்துவதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பதிலாக, தேசிய வேலையற்றோர் பதிவு (National Register of Unemployed – NRU) திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவு அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, வேலையின்மைக்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் சேர, 8151994411 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, தங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் கட்சி களமிறங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள இந்த நாடு தழுவிய பிரச்சாரமான வேலையற்றோர் தேசிய பதிவு (NRU) என்பது மத்தியஅரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.