மும்பை

ட்டமேதை அம்பேத்கருக்கு மிக உயரமான சிலை அமைப்பதற்கு பதில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் என அவர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

தலித் மக்களின் தலைவர் மற்றும் சட்ட மேதை எனப் புகழப்படும் பி ஆர் அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் ஆவார்.  அவருக்கு மும்பை நகரில் மிக உயரமான சிலை ஒன்று அமைக்க மகா விகாஸ் அகாதி அரசு இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று தீர்மானம் இயற்றியது.   சுமார் 100 அடி உயரம் உள்ள இந்த சிலையை ரூ.1089.95 கோடி செலவில் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பி ஆர் அம்பேத்கரின் பேரனும் வாஞ்சித் பகுஜன் அகாதி தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர்,”சட்டமேதை அம்பேத்கரின் பெருமையை அவருடைய சிலையின் உயரத்தை வைத்துக் கணக்கிடுவது தவறாகும்.  அவர் அரசியலுக்குச் செய்துள்ள சேவைகளை வைத்து அதை கணக்கிட வேண்டும்.   தற்போது அம்பேத்கருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே 100 அடி உயர சிலை அமைக்க உள்ளது குறித்து மகிழ்கிறேன்.

ஆனால் இது போல நினைவுச் சின்னம் அமைப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.  கட்னத 1998-99 ஆம் வருடம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அம்பேத்கர் சர்வதேச கல்வி மையம் அமைக்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதன் பிறகு பாஜக, காங்கிரஸ், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் எனப் பல கட்சிகள் ஆட்சி அமைந்தும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மும்பையில் அம்பேத்கருக்கு இன்னொரு சிலை வைப்பதால் என்ன நன்மை அளிக்கும்? முந்தைய சிலைகளை விட இது உயரமாக இருக்கும்.  அவ்வளவு தான்.  இதை வைத்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குப்  பெருமை தேடிக் கொண்டு தங்கள் வாக்கு வங்கியை வலுவாக்க முயற்சி செய்யும். நாம் அம்பேத்கரின் பெருமையை ஒரு சுற்றுலா மையமாகக் குறைக்கக் கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.