டெல்லி:
பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் புளு கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது.
சர்ச்சை புகழ் தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய கர்நாடகம் மற்றும் குஜராத் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், நித்தியானந்தா நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது வெளிநாட்டு தீவு ஒன்றில் தங்கியுள்ள நித்தி, அந்த தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டு இருப்பதாக கூறி வருகிறார்.
தலைமறைவாக இருந்துக்கொண்டே அவ்வப்போது, யுடியூப் வலைதளத்தில் தமிழக காவல்துறை குறித்தும், அரசியல் குறித்தும் நக்கலாகவும், நகைச்சுவையாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவை பிடிக்க கர்நாடக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நித்தியானந்தா வுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரி, டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
அதுபோல குஜராத் மாநில அகமதாபாத் காவல்துறையினரும், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் நித்தியானந்தாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும்படியும் இதற்கான புளு கார்னர் நோட்டீஸ் விடுக்கும்படியும் பரிந்துரைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து மத்தியஅரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல், நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
பொதுவாக தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படுவது வாடிக்கை. இந்த நோட்டீஸ் தற்போது நித்தியானந்தா குறித்தும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நித்தியானந்தா எந்த நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது விரைவில் தெரிய வரும்.