டில்லி
வங்கிகளைப் போல் எல் ஐ சி நிறுவனத்திலும் வாராக்கடன் அதிகரித்து ரூ.30000 கோடியை எட்டி உள்ளது.
எல் ஐ சி என சுருக்கமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் அரசுத்துறை நிறுவனம் ஆகும். பலர் இந்த காப்பீட்டுக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் தனது முதலீடுகளை அரசு மற்றும் வங்கிகளில் முதலீடு செய்து பத்திரமாக வைத்துள்ளதாக நாம் எண்ணி வருகிறோம். ஆனால் சமீபத்தில் வெளியாகி உள்ள தகவல்கள் அதைத் தவறு எனத் தெரியப்படுத்தி உள்ளன.
எல் ஐ சி நிறுவனம் வங்கிகளைப் போல் பல பெரிய நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ளது. உதாரணமாகத் தனியார் வங்கிகளான எஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவை பெரிய நிறுவனங்களுக்குக் கடன் அளித்துள்ளன. இவற்றில் எஸ் வங்கி அளித்துள்ள கடன்களில் 7.39%, ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள கடன்களில் 6.37% மற்றும் ஆக்சிஸ் வங்கி அளித்துள்ள கடன்களில் 5.3% வாராக்கடன்கள் ஆகி உள்ளன.
ஆயுள் காப்பிட்டுக் கழகத்துக்கும் தற்போது அதே நிலை உருவாகி உள்ளது. எல் ஐ சி பல கார்பரேட் நிறுவனங்களுக்கு பருவக் கடன் மற்றும் திருப்ப முடியாத பங்குகள் எனக் கடன்கள் வழங்கி உள்ளது. இந்த கடன்களில் 6.1% வாராக்கடன்களாக ஆகி உள்ளன. கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாத்ம் 30 ஆம் தேதி கணக்கின்படி எல் ஐ சிக்கு ரூ.30000 கோடி வாராக்கடன் உள்ளது.
இவ்வாறு கடனை செலுத்தாத நிறுவனங்கள், டெக்கான் கிராணிக்கிள், எஸ்ஸார் போர், கான்மோன், ஐ எல் எஃப் அண்ட் எஸ், பூஷன் பவர், வீடியோகோன், அலோக் இண்டஸ்டிரீஸ், அம்டிராக் ஆட்டொ, ஏபிஜி ஷிப் யார்ட், யூனிடெக், உள்ளிட்டவை அடங்கும். இந்த வாராக்கடன்களால் எல் ஐ சி யின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இவற்றில் சில நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால் அந்நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகையைத் திரும்பப் பெற இயலாது எனக் கூறப்படுகிறது. இந்நிறுவனங்கள் எல் ஐ சி நிறுவனத்துக்குத் தர வேண்டிய அசல் தொகை மட்டும் ரூ.25000 கோடி உள்ளது. இதைத் தவிரப் பங்குகள் மூலம் அளிக்கப்பட்ட தொகை ரூ5500 கோடி வரை உள்ளது. ஆயினும் எல் ஐ சி நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ. 2600 கோடி லாபம் ஈட்டி உள்ளது.