சென்னை:
சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டு கடற்கரையோரம், விதிகளி மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாக்களை இடித்துத்தள்ள சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 343 வீடுகள் உள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்த அந்த குடியிருப்புகள் வெடிவைத்து கடந்த வாரம் தகர்க்கப்பட்டன.
இதை நினைவுபடுத்திய நீதிபதிகள், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஆலிவ் தீவு என்று அழைக்கப்படும் 16,218 சதுர அடி பங்களாவை இடிக்க அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இந்தபகுதியில் உள்ள 5 சொகுசு பங்களாக்களுக்கான மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பபட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணை யைத் தொடர்ந்து, முட்டுக்காடு பகுதியில் உள்ள சொகுசு பங்காளாக்கள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு உள்ளதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முட்டுக்காடு படகு குழாம் அருகே உள்ள கடற்கரையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாக்கள் அப்புறப்படுத்த வேண்டியவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கேரளா மாநிலம் மரடுவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை பின்பற்றாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், முட்டுக்காடு கடற்கரை யோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பங்களா இடிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கான செலவை அந்த சொகுசு பங்களாவின் உரிமையாளர் ஏற்று கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.