சென்னை: தூத்துக்குடியில் 40,000 கோடி ரூபாய் செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அதன் படி தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முன்னணி தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல் கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் சீனாவின் வின்டெக் மின்சாரவாகன தயாரிப்பு நிறுவனத்தை அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.