சென்னை:
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி தரப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும், பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது என துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்தும் விமர்சித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், பொதுமக்களின் கருத்துக்களும் கேட்க வேண்டியதில்லை என்று விதிகளில் மத்தியஅரசு திருத்தம் செய்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும், ஹைட்ரோ கார்பன் விகாரத்தில் மக்களை திசைத்திருப்ப ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் முயல்கிறது, மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது.என்று திட்டவட்டமாக கூறினார்.
மேலும், துக்ளக் பொன் விழா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினியின் பேச்சு குறித்த கேள்விக்கு, பரட்டை பற்ற வைத்தது எரிந்து கொண்டிருக்கிறது. துக்ளக் விழாவில், ரஜினி அது குறித்து மட்டும் பேசியிருக்கலாம், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றார்.